திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து தினமும் லாரிகள் மூலம் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்தந்த கேஸ் ஏஜென்சிகளிடம் ஒப்படைப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், இத்தொழிற்சாலையிலிருந்து லாரியில் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு, விராலிமலை அருகே உள்ள பேரையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கேஸ் ஏஜென்சிக்கு விநியோகத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு லாரி டிரைவர் மோகன், ஏஜென்சி உரிமையாளரிடம் சிலிண்டர் குறித்த விவரங்களை விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஐ.ஆர்.இ (IRE) ரசீது தருவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ஏஜென்சி உரிமையாளர் திடீரென்று டிரைவர் மோகனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். மேலும், அவரை கட்டிவைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவந்த டிரைவர் மோகன், விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டார். சக டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் இனாம்குளத்தூரில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் லாரி டிரைவர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது.
டிரைவர் மோகனை தாக்கிய ஏஜென்சி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று காலை முதல் லாரி டிரைவர்கள் சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றாமல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் லாரிகள் எதுவும் வெளியூர்களுக்குச் செல்லாமலும், சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றாமலும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் திடீரென பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் மத்தியில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.