வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கட்டைப்பிராய் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டுமானம் ஒன்றினை இடித்து அகற்றுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. இதற்கமைவாக, குறித்த கட்டடத்தை இடித்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இப்பணிகளை பிரதேச சபை தவிசாளர், செயலாளர், பொலிஸார் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்விடத்திற்கு வந்த இரு இளைஞர்களில் ஒருவர் தொலைபேசியில் காணொளி பதிவு செய்ய, மற்றொரு இளைஞன் தவிசாளரை அவதூறாகப் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் தவிசாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குறித்த இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.