சென்னை
தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், புதிய 4 ஆண்டு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது! கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற இந்த உயர்கல்வி ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கிய ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் மாநில உயர்கல்விக் கொள்கையை மறுசீரமைத்து, அதில் 4 ஆண்டு பட்டப்படிப்பு முறையைச் சேர்ப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் 4 ஆண்டு பட்டப்படிப்பு உள்ள நிலையில், தமிழக அரசும் அதற்கு இணையான ஒரு நவீன மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கையில் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிரடியாக உயர்த்தவும், ‘பெருந்தலைவர் காமராஜர் திட்டம் 2’-ன் கீழ் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாநிலத்தில் ஏற்கனவே ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளதாலும், சேர்க்கை விகிதம் குறைவாக இருப்பதாலும் புதிதாக எந்தவொரு பொறியியல் கல்லூரியையும் திறக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 20 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத் தேடுதல் குழு விதிகளில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், உதவி பெறும் கல்லூரிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான முன்அனுமதி நடைமுறையைத் தளர்த்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்பயிற்சி (Internship) மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உயர்கல்வித்துறையை முழுமையாக வலுப்படுத்த முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது!
#ThalapathyVijay #TVKGovernment #HigherEducationTN #ChiefMinisterVijay #TamilNaduPolitics #TNPolitics #Chennai #4YearDegree #TamilNews #ViralNews #EducationPolicy #GovernmentSchoolQuota #EngineeringColleges #KamarajarScheme #HigherEducation #TNNews #TamilNaduNews #TrendingTN #LatestNewsTN #CollegeEducation