சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 65 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்-சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
அவர் இன்று (26) அதிகாலை 03.30 மணியளவில் அபுதாபியிலிருந்து எட்டிஹாட் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EY-396 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தயாரிப்பு வகையை சேர்ந்த 40,000 சிகரெட்டுகளைக் கொண்ட 200 சிகரெட் பொதிகளும், 32 மின்-சிகரெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவர் கொண்டு வந்த சிகரெட் தொகுதிகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.