முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய பதிவை வெளியிட்டு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட எனும் சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பிலும் அதற்குப் பின்னால் உள்ள வெளிநாட்டுச் சக்திகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (30) முறைப்பாட்டை கையளித்த பின்னர் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்து, அவரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ள சான் கணேகொட என்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்தோம். தம்மை சிவில் சமூக செயற்பாட்டாளர் என கூறிக்கொள்ளும் இவர், என்ன மாதிரியான சமூக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது.
மக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட டி.எஸ். சேனாநாயக்க, டி.பி. விஜேதுங்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரை, எதிர்காலத்தில் மக்களின் வாக்குறுதியால் பதவிக்கு வரவுள்ள எந்தவொரு ஜனாதிபதிக்கும் எதிராக இவ்வாறான செயல்களில் ஈடுபட எவருக்கும் இடமளிக்க முடியாது. வீதிகளில் செல்பவர்கள் ஜனாதிபதிகளைத் தொடர்பு கொண்டு குரல் பதிவுகளை எடுத்து வெறுப்பைப் பரப்புவதை அனுமதிக்க முடியாது.
இந்த விடயத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேச்சைக் குழுக்கள் மற்றும் சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து இவ்வாறான கீழ்த்தரமான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான குரல் பதிவுகளை வெளியிட்டு அச்சுறுத்தும் நபருக்குப் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் செயற்படுகின்றனவா என்பது குறித்து சந்தேகம் காணப்படுகின்றது. நாட்டை அல்லது அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதித்திட்டம் காணப்படுகிறதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும். இவர் தற்போதைய ஜனாதிபதி அநுரவுடன் தொடர்பில் இருந்து, எதிர்காலத்தில் அவர் ஓய்வுபெற்ற பின்னரும் இவ்வாறான குரல் பதிவுகளை வெளியிடக்கூடும்.
இவருக்கு எதிராக பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் உள்ளதாக காவல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனவே இவரது தொலைபேசி உரையாடல் தரவுகள், வங்கிக் கணக்குகள், வருமான மூலங்கள் மற்றும் தொழில் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவரிடம் முறையான வருமான ஆதாரம் இல்லையெனில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் மூலம் தணிக்கை செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதிகளிடம் கேள்விகளை எழுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது. எனினும் அவர்கள் தவறு செய்திருந்தால் அதற்கு கௌரவமிக்க நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டும். தனிநபர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட முடியாது. எனவே இச்சம்பவம் தொடர்பில் தொலைபேசி தரவுகள் மற்றும் சர்வதேச சதித்திட்டங்கள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் உடனடி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.