கனடாவில் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மேற்பார்வைச் சீர்திருத்தங்களை (Oversight reforms) அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கனடிய குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் (IRCC) தகவலின்படி, இந்த மாற்றங்கள் குடியேற்றம் மற்றும் குடியுரிமை ஆலோசனைகளைப் பெறுபவர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தவும், உரிமம் பெற்ற ஆலோசகர்களின் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் “நேர்மையான மற்றும் நம்பகமான” ஆலோசனைகளைப் பெறுவதை உறுதி செய்யவும், அமைப்பிற்குள் நேர்மையைப் பேணவும் இந்தச் சீர்திருத்தங்கள் உதவும் என லீனா மெட்லெஜ் தியாப் (Lena Metlege Diab) தெரிவித்துள்ளார்.
ஜூலை நடுப்பகுதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய விதிமுறைகள், குடியேற்றம் மற்றும் குடியுரிமை ஆலோசகர்கள் கல்லூரிக்கு (College of Immigration and Citizenship Consultants) பின்வரும் அதிகாரங்களை வழங்கும்:
-
தவறிழைப்போருக்கான தண்டனைகளை (Penalties) அதிகரித்தல்.
-
ஒழுங்கு நடவடிக்கை மற்றும் விசாரணை நடைமுறைகளை வலுப்படுத்துதல்.
-
உரிமம் பெற்ற ஆலோசகர்களுக்கான வெளிப்படைத்தன்மை தேவைகளை விரிவுபடுத்துதல்.
-
2027 முதல் பொதுப் பதிவேட்டில் (Public Registry) கூடுதல் விபரங்களைச் சேர்த்தல்.
-
அறிக்கையிடல் முறைகளை மேம்படுத்துதல்.
மேலும், ஆலோசகர்கள் கல்லூரியின் சபை தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், அதனை மேற்பார்வையிட ஒரு நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சீர்திருத்தங்கள் குடியேற்ற அமைச்சருக்கு வழங்குகின்றன.
இவற்றுடன், குடியேற்ற ஆலோசனை மோசடிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்ட இழப்பீட்டு நிதிக்கும் (Compensation fund) புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக உரிமம் பெற்ற ஆலோசகர்கள் சம்பந்தப்பட்ட குடியேற்ற மற்றும் குடியுரிமை மோசடிகள் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.