சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அமைச்சர்களே அழுத்தம் கொடுப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சியருக்கு அழுத்தம்:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆட்சியரை அழைத்து மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமைச்சர்களே இன்று திமுகவை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் என்றார். நடந்த சம்பவம் குறித்து ஆட்சியர் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அழுத்தம் தரப்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளதாகவும், மக்கள் கண்காணிப்புக் குழு போன்ற அமைப்புகள் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருவதாகவும், மாவட்டப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதற்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று கேள்வி எழுப்பினார்.
காவல் நிலைய ஆய்வு சட்ட மீறல்:
உள்துறை அமைச்சரைத் தவிர வேறு யாருக்கும் காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு நடத்த உரிமை கிடையாது என்றும், அமைச்சர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ வழக்கு டைரி, முதல் தகவல் அறிக்கை நகல்களைப் பார்ப்பது மிகப்பெரிய சட்ட மீறல் என்றும் குறிப்பிட்டார். பெண் காவலர்களின் செல்போன்களில் உள்ள தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.
மனதைப் புண்படுத்தும் செயல்:
கோவில்களைக் கட்டிய சோழ மன்னர்களும், கலைஞர் ஆட்சியும் யாரையும் கடவுளுக்கு நிகராகக் காட்டிப் போற்றியதில்லை என்றும், தற்போது நடைபெறும் செயல்கள் கடவுள் நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அனைவரின் மனதையும் புண்படுத்துவதாகவும் கனிமொழி தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் வழக்குப் பதிவு செய்யும் தவெக அரசு, இதற்கு என்ன வழக்குப் பதிவு செய்யப்போகிறது என்றும் அவர் கேட்டார்.
பின்வாங்காது திமுக:
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மூலம் சோதனை நடத்துவது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது போன்றவற்றால் திமுக தலைவர்களை அச்சுறுத்த தவெக அரசு முயல்வதாகவும், ஆனால் திமுக எந்த நிலையிலும் பின்வாங்காது என்றும் கனிமொழி தெரிவித்தார்.
மறுவரையறை, மேகதாது:
குளிர்கால கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தகவல் இல்லை என்றும், நியாயமான மறுவரையறையே திமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார். மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, அவர் எதற்கெல்லாம் கருத்து தெரிவித்திருக்கிறார் என்று திருப்பிக் கேட்டார்.
#Kanimozhi #DMK #Kallakurichi #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive