சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத் துறை சாதனைகளை அங்கீகரித்துப் பாராட்டும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்லும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு 100 மில்லியன் ரூபாய் நிதிப் பரிசு வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கான தொடர் நிதிப் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவின் கீழ், தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகைகள் பின்வருமாறு:
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: 100 மில்லியன் ரூபாய் உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிகள்: 100 மில்லியன் ரூபாய்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்: 75 மில்லியன் ரூபாய்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 50 மில்லியன் ரூபாய்
சார்க் (SAARC) விளையாட்டுப் போட்டிகள்: 15 மில்லியன் ரூபாய்
மேலும், இப்போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்லும் வீரர்களுக்கும், ஏனைய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களுக்கும் அதற்கேற்றவாறு நிதிப் பரிசுகளை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இளைஞர்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள 8,500 மில்லியன் ரூபாய் எனும் பரந்த நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகவே இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன.