ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்சே (Marc-André Franche) அவர்களுக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
தசாப்த காலங்களாக தமிழ் இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படாமை குறித்து தலைவர்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் இச்சட்டத்தை மாதாந்தம் பாராளுமன்றத்தில் புதுப்பித்து வருவதையும், அது தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு வழிவகுப்பதையும் அவர்கள் ஐ.நா பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புகள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்பட்டது. தொல்பொருள் திணைக்களம், வனவிலங்குத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன திட்டமிட்ட ரீதியில் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, இவை “அரசாங்கத்திற்குள் இயங்கும் இன்னொரு அரசாங்கம்” போலச் செயல்படுவதாகத் தலைவர்கள் விபரித்தனர்.