இலங்கையின் பாரம்பரிய அணிசேரா கொள்கைக்கு அப்பால் சென்று, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் சர்வதேசப் பங்காளித்துவங்களைக் கட்டியெழுப்ப, அனைத்து நாடுகளுடனும் “நேர்மறையான கூட்டிணைவுகள்” (Positive Alignments) அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நாட்டு மக்களுக்குப் பயனளிக்கவும் கூடிய வகையில், இயன்றவரை பல நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய நலன்களைப் பாதுகாக்கும், பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்தும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் மற்றும் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தைத் திறம்படப் பயன்படுத்தும் ஒரு ஒத்திசைவான மற்றும் முனைப்பான வெளியுறவுக் கொள்கையை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.