கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல் இராணுவ முகாமிற்காக (SLEME), பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த காணி அளவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் இன்று (02) காலை 8 மணியளவில் இராணுவ முகாம் முன்றலில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட காணி உரிமையாளர்கள், இராணுவத்தினருக்கும் ஆளும் தரப்பிற்கும் எதிராகப் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தித் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்: செல்வராசா கஜேந்திரன், சி.சந்திரகுமார், உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
நில அளவீடு செய்யப்பட்டால் மக்கள் தமது பூர்வீக நிலங்களை நிரந்தரமாக இழக்க நேரிடும் எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். இதன் தொடர்ச்சியாக, பச்சிலைப்பள்ளி மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, குறித்த நில அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கப் போவதாகக் காணி உரிமையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.