செயற்கை இரசாயனங்கள் இல்லாத, இயற்கையான முறையில் துணிகளுக்கு நிரந்தரமாக சாயம் பூசும் ஒரு வியக்கத்தக்க நதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் பாய்ந்து வருகிறது! உலகப் புகழ்பெற்ற ‘பாக்’ அச்சுக்கலைக்குப் பின்னால் இருக்கும் இந்த அதிசய நதியின் ரகசியமும், நம் பாரம்பரியக் கைவினைக்கலையின் சிறப்புகளும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இந்தியாவில் இரசாயனங்களைப் பயன்படுத்தாமலேயே துணிகளுக்கு நிரந்தரமாகச் சாயம் பூசக்கூடிய ஒரு நதி இருக்கிறது.
நமக்கு இது சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. இந்த யோசனை மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாக் என்ற கிராமத்து மக்களால் உருவானது. மேலும் இந்த பாக் அச்சுக்களின் மாயாஜாலம், இயற்கையுடனான உறவை, குறிப்பாக பாக் கிராமத்தின் வழியாகப் பாயும் பாகினி நதியை அடிப்படையாகக் கொண்டது.
தார் மாவட்டத்தில் உள்ள பாகின் என்ற சிறிய கிராமத்திலுள்ள இந்த பாகினி ஆறு மற்ற ஆறுகளை விட முற்றிலும் மாறு பட்ட விதத்தில் செயல்படுகிறது. ஆம்!! இந்த ஆறு துணிகளுக்கு வண்ணமளிக்கிறது. இந்த ஆற்றின் நீரில் இயற்கையாகவே கால்சியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருக்கும் காரணத்தினால் துணி பட்ட கணமே, சாயங்கள் பிரகாசமாக, அடர்த்தியாக மேலும் உயிர்பெற்றும் மாறுகின்றன. துணிகளும் மென்மையடைகின்றன.
இந்த பாகின் நதியிலிருந்துதான் இந்தியாவின் மிகவும் பிரசித்த பெற்ற இயற்கை ஜவுளிகளில் ஒன்றான ‘பாக்’ அல்லது ‘பாகின் பிரிண்ட்’ உருவாகிறது. இந்தக் கைவினைக்கலை தற்போது உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திய வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியாக மட்டுமே இருந்த பாகின் கிராமம், இப்போது இந்த நதிக்காகவும் இந்தக் கலைக்காகவும் உலகளவில் அறியப்பட்டு வருகிறது.
பாகினி நதி நீரில் உள்ள அதிக கனிமச் சத்து, குறிப்பாக அதனுள் அடங்கியுள்ள செம்பு, சாயமிடும் செயல் முறையில் ஒரு இயற்கையான வினையூக்கியாக அல்லது சாயமூன்றியாகச் செயல்பட்டு, செயற்கை இரசாயனங்களின் உதவி இல்லாமலேயே வண்ணங்களை அடர்த்தியாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்கவும் வழி வகுக்கிறது. இந்த இயற்கையான செயல்முறையானது, துணியில் உள்ள மாவுச்சத்தை நீக்குவதற்காக ஆற்றுக்கற்களில் துணியைக் கழுவும் ‘காரா’ என்ற முறையுடன் தொடங்குகிறது; பின்னர், தாமிரம் நிறைந்த நீரோட்டத்தில் துணி மூழ்கடிக்கப்பட்டு, பிறகு அதை நன்றாக காய வைத்து சாயமிடுவதற்காக தயார் செய்யப்படுகிறது.
இந்த வகை சாய அச்சுக்களின் மிக முக்கியமான அம்சம் கை அச்சுப் பதிப்பு ஆகும். இது புளி, மாதுளைத் தோல், இரும்புத் துரு மற்றும் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தாவரச் சாயங்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. சாயம் அச்சிடப் பட்ட பிறகு அலிசரின் மற்றும் தாவடி சாற்றில் அதாவது சிவப்பு அல்லது ஆரஞ்சு படிகம் மற்றும் காட்டாத்தி பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றில் இந்த துணிகள் கொதிக்க வைக்கப் படுகின்றன. இறுதியாக, அந்தத் துணிகளை ஆற்றில் பலமுறை அலசுகிறார்கள்.
ஆறுகள் வறண்டு போகும் காரணத்தினாலும் மாசுபடுவதாலும் பாக் அச்சுக்கலையின் எதிர்காலமும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த இயற்கையை தக்க வைக்கும் பொறுப்பு மக்களாகிய நம் கைகளில் தான் இருக்கிறது.
இரசாயன நச்சுகளிலிருந்து விலகி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆடைகளை அணிவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக்கலையையும் எவ்வித தடையுமின்றி உங்கள் தினசரி வாழ்வில் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.