ஈரானின்ஹோர்முஸ் நீரிணை(Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படாவிட்டால் அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.
பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க, ஈரானுக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 6, 2026) வரை டிரம்ப் அவகாசம் அளித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆவேசமாக பதிவிட்டுள்ள அவர், “செவ்வாய்க்கிழமை என்பது ஈரானில் ‘மின் நிலைய நாள்’ மற்றும் ‘பாலங்கள் நாளாக’ அமையும். இது முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானியர்களை “பைத்தியக்காரர்கள்” என விளித்துள்ள அவர், நீரிணையை உடனடியாகத் திறக்காவிட்டால் ஈரான் நரகமாக மாறும் என எச்சரித்துள்ளார். அவரது பதிவின் இறுதியில் “அல்லாவிற்குப் புகழ் உண்டாகட்டும்” (Praise be to Allah) என்றும் சேர்த்துள்ளார்.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% பங்கைக் கொண்டுள்ளஹோர்முஸ் நீரிணையைமூடப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விநியோகத் தடை காரணமாக உள்நாட்டு மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறையில் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப்பின் இந்த பகிரங்க மிரட்டல், பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை (Civilian Infrastructure) குறிவைப்பதாக அமைந்துள்ளதால், இது போர்க்குற்றமாக கருதப்படலாம் என மனித உரிமைகள் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. எனினும், திங்கட்கிழமைக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக டிரம்ப் பின்னர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.