கனடாவின் வோன் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றிற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிணையில் வரமுடியாத நிபந்தனையுடன் கூடிய ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று, ஹைவே 7 மற்றும் கீல் வீதிக்கு (Highway 7 and Keele Street) அருகில் உள்ள ‘ஏடிஎல் லவுஞ்ச்’ (ATL Lounge) இரவு விடுதிக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் பாதுகாப்புப் பிரிவினராகக் கடமையாற்றிய தோசின் அமோஸ்-அரோவோஷெக்பே (Tosin Amos-Arowoshegbe – 25 வயது), சிபுயீஸ் மோமா (Chibueze Momah – 22 வயது) ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரும் படுகாயமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கிட்டத்தட்ட இரண்டு வருட தேடுதலுக்குப் பின்னர், குற்றவாளியான கென்ஸ்வொர்த் ஆல்டன் பிரான்சிஸ் (Kensworth Alton Francis) என்பவரை கடந்த 2024 மார்ச் மாதம் கனெக்டிகட்டின் ஹார்ட்ஃபோர்ட் நகரில் வச்சு அமெரிக்க மார்ஷல் சேவை (U.S. Marshals Service) கைது செய்தது. அதன்பின்னர் அவர் யோர்க் பிராந்தியத்திற்கு (York Region) நாடுகடத்தப்பட்டார்.
விசாரணைகளின் முடிவில், ஜூரி (Jury) எனப்படும் நடுவர் குழுவினர் பிரான்சிஸை பின்வரும் குற்றங்களில் குற்றவாளியாக அறிவித்தனர்:
-
இரண்டு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் (First-Degree Murder)
-
சட்டவிரோதமாக உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்துதல் (Unlawfully Causing Bodily Harm)
இதனடிப்படையில், அவருக்கு 25 ஆண்டுகள் பிணையில் வரமுடியாத இரு ஆயுள் தண்டனைகளும், உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக மேலதிகமாக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தண்டனைகள் அனைத்தும் ஏககாலத்தில் (Concurrently) அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.