பதுளை மாவட்டம், பண்டாரவளை – லியன்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) காலை சுமார் 9.30 மணியளவில் குறித்த வீட்டின் சமையலறை மற்றும் மலசலகூடம் அமைந்துள்ள பகுதிகளுக்கு இடையிலான நிலப்பகுதி திடீரென சரிந்து விழுந்துள்ளது.
குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் அவர்களது ஆண் பிள்ளை என மூவர் வசித்து வருகின்றனர். எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.