அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான வழியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை முற்றாக கட்டுப்படுத்த முடியாத இலங்கை கடற்படையின் செயற்பாடு தொடர்பிலுமு் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நாடாளுமன்றில் வியாழக்கிழமை (05) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளால் வடக்கு கடற்பரப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது.
சட்டவிரோத இந்திய மீனவர்கள் ஒருபுறம், இலங்கை சட்டவிரோதிகள் மறுபுறம் என, கடல் முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. வடக்கு மீனவர்களின் பொறுப்பில் வடக்கு கடற்பகுதியைத் தாருங்கள். கூடியவிரைவில் சீராக்கிக் காட்டுகின்றோமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள். முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், குறிப்பாக தீவுப்பகுதி, மன்னார், கிளிநொச்சி மீனவர்கள் இலங்கையின் பிரஜைகள் இல்லையா? நீதியாக, நேர்மையின் வழியில் சீரானவகையில் கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் ஏன் வஞ்சிக்கப்படுகின்றனர். ஏன் சட்டவிரோதிகளின் ஆதிக்கத்தை வடபகுதிக் கடலில் அனுமதிக்கின்றீர்கள்.
இந்திய இழுவைமடிப் படகுகள், உள்ளூர் சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடி, டைனமெற் வெடிவைத்து மீன்பிடிக்கும் சட்டவிரோதிகள் எமது கடலை அழிக்கின்றனர். இந்திய இழுவைமடிச் சட்டவிரோதிகளால் எமது கடல் வளங்கள் மட்டுமல்ல மீன்பிடி வலைகளும் முற்றாக அழிக்கப்படுகின்றன.
இருப்பினும் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையால் முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஓரிரு படகுகளையும், அந்தப் படகுகளில் உள்ள மீனவர்களையுமே கடற்படையால் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கமுடிகின்றது.
இவ்வாறு இலங்கைக் கடற்படையினர் அலட்சியப்போக்குடன் செயற்படுவது மிகவும் கேவலமானது எனச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.