ரொறன்ரோ, நவம்பர் 28, 2026
கனடாவின் ரொறன்ரோ நகரிலுள்ள ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் டி.டி.சி (TTC) பேருந்தொன்றில் 34 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான நிக்கோலஸ் குரோஃபோர்ட் (Nicholas Crawford) என்பவர் வெள்ளிக்கிழமை மாலை ரொறன்ரோ பொலிஸாரின் 41 ஆவது பிரிவில் (41 Division) தானாக முன்வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு (Second-degree murder) சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சந்தேகநபரின் அடையாளம் மற்றும் புகைப்படத்தைப் பொலிஸார் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே அவர் சரணடைந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் எக்லிண்டன் அவென்யூ கிழக்கு (Eglinton Avenue East) மற்றும் ஃபால்மவுத் அவென்யூ (Falmouth Avenue) பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, பேருந்திற்குள் இருந்த 34 வயதான ஜோர்டான் பெர்ரி (Jordan Berry) என்பவரை குரோஃபோர்ட் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இத்தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த பெர்ரி, உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலின் பின்னர் பேருந்திலிருந்து இறங்கி நடந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், வெள்ளை நிற பிட்புல் (Pit bull) வகை நாயொன்றுடன் இறுதியாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாய் கடித்ததாலேயே இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்த போதிலும், பொலிஸார் அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து ரொறன்ரோ நகர முதல்வர் ஒலிவியா சௌ (Olivia Chow) வெளியிட்டுள்ள அறிக்கையில், பெர்ரியின் மரணம் தமக்கு ஆழ்ந்த கவலையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். “எமது பொதுப் போக்குவரத்து அமைப்பில் இடம்பெறும் வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. டி.டி.சி பேருந்துகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் மற்றும் டி.டி.சி நிர்வாகத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டி.டி.சி பிரதம நிறைவேற்று அதிகாரி மந்தீப் லாலி (Mandeep Lali) வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை வழங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.