பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி, குடத்தனை வடக்கில் இன்று புதன்கிழமை (20) போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையில் அதிபராக பணியாற்றியவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வித் திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரி இன்றைய தினம் காலை 7. 45 மணியளவில் குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் “மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே”, “அதிபரின் தற்காலிக இடமாற்றத்துக்கு காரணம் என்ன, அதிகாரிகளே பதில் சொல்லுங்கள்” என்பது போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், கிராம மக்கள், நலன்விரும்பிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில் கல்விப் பணிப்பாளருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்று பாடசாலையின் தற்போதைய பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அவரை, இடமாற்றம் செய்யுமாறு கடந்த காலத்தில் உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததன் அடிப்படையிலேயே அந்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.