யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதல் தொடர்பாக, குறித்த பீடத்தைச் சேர்ந்த 21 மாணவர்களைக் கோப்பாய் காவல்துறையினர் திடீரெனக் கைது செய்துள்ளனர்.
இம்மோதலில் பேப்பர் கட்டர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் வெட்டுக் காயங்களுக்குள்ளான ஐந்து மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எவ்வித அறிவிப்பும் இன்றி மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில், குறித்த பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர் தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட மற்றும் குழு ரீதியான முரண்பாடே இந்த வன்முறை மோதலாக மாறியுள்ளமை தெரியவந்துள்ளது.
வாக்குவாதமாகத் தொடங்கிய இம்மோதலில், ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரை இலக்கு வைத்துக் கூர்மையான பேப்பர் கட்டர்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்தனியான உள் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.