சென்னை:
ஆந்திராவில் நடைபெற்ற முதலீட்டு மாநாடு தொடர்பான ஆந்திர தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷின் கருத்திற்கு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார். இரு மாநில அமைச்சர்களின் பதிவுகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன.
முதலீட்டு மாநாடும் சர்ச்சையும்:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு உச்சி மாநாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளான இந்த மாநாட்டில், தமிழக அரசின் கீழ் செயல்படும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் பணியாற்றியதாகத் தகவல் வெளியாகித் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான தகவல்கள் ஆந்திர அரசுக்குக் கசிந்ததாகப் புகார்கள் எழுந்திருந்தன.
நாரா லோகேஷ் பதிவு:
இந்நிலையில், ஆந்திர தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிக முக்கியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது. அதன் பெயர்தான் முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பதாகும். இதனைத் தாராளமாக அனைவரும் பின்பற்றலாம்,” என்று தெரிவித்திருந்தார். ஆந்திர அமைச்சரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிச் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் கீர்த்தனா பதிலடி:
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவான பதில்கள் நல்லவைதான். ஆனால், வேகமான செயல்பாடுகள் அதைவிடச் சிறப்பானது! வெற்றி முதலீடு மற்றும் மாற்றத்திற்கான மாநாடு 2026-ன் இரண்டாவது பதிப்பிற்குத் தமிழ்நாடு தயாராகி வருகிறது. எங்களது இலக்கு தெளிவானது. அதாவது, முதலீட்டு உறுதிமொழிகள், மாற்றத்திற்கான மைல் கற்கள், களத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் ஆகியவை எங்களது இலக்குகள் ஆகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் இலக்கு:
தொடர்ந்து அந்தப் பதிவில் அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையின் கீழ், முதலீட்டு உறுதிமொழிகளை உறுதியான பலன்களாக மாற்றவும், களத்தில் திட்டவட்டமான முடிவுகளை வழங்கவும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கு இன்னும் 4 நாட்கள்தான் உள்ளன,” என்று பதிவிட்டுள்ளார். ஆந்திர அமைச்சரின் கருத்திற்குத் தமிழக அமைச்சர் அளித்துள்ள இந்தப் பதிலடி தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
#MinisterKeerthana #NaraLokesh #TamilNaduInvestments #GuidanceTN #AndhraPradesh #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive