சென்னை:
பெண்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, சுயசார்புடன் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் கூட்டுறவுத்துறையின் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
‘சிங்கப்பெண் கடன்’ திட்டம்:
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், “கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உன்னதத் தாரக மந்திரத்திற்கு ஏற்ப, குடும்பத்தின் ஆணிவேராகத் திகழும் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பை உறுதி செய்வதிலும், அவர்களைத் தன்னம்பிக்கை மிக்க தொழில் முனைவோராக உயர்த்துவதிலும் கூட்டுறவுத்துறை மகத்தான பங்காற்றி வருகிறது. இதற்காகத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3,428.49 கோடி கடனுதவி:
நடப்பாண்டில் நவம்பர் 2026 வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவிற்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (PACCS) மூலம் 22,972 பயனாளிகளுக்கு ரூ.1,773.37 கோடியும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் (CCB) மூலம் 13,344 பயனாளிகளுக்கு ரூ.1,432.02 கோடியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் (UCB) மூலம் 973 பயனாளிகளுக்கு ரூ.96.56 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (UCCS) மூலம் 641 பயனாளிகளுக்கு ரூ.69.43 கோடியும், மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் (LAMPS) மூலம் 3,154 பயனாளிகளுக்கு ரூ.29.50 கோடியும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி (TNSACB) மூலம் 285 பயனாளிகளுக்கு ரூ.27.60 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?:
கந்துவட்டிப் பிடியிலிருந்து மக்களை மீட்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகளிரும் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்றுப் பயன்பெறுமாறு அமைச்சர் காந்திராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான உதவிகளைப் பெற 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
#SingappenLoan #WomenEntrepreneurs #TNCooperativeDept #MinisterGandhiraj #TamilNadu #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive