கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் (Pearson Airport) மற்றும் இரண்டு குறிப்பிட்ட விமானப் பயணங்களில் பயணித்த பொதுமக்களுக்குத் (Measles) வைரஸ் பரவியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பீல் பொது சுகாதாரப் பிரிவு (Peel Public Health) எச்சரித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தட்டம்மைப் பாதிப்பினை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பின்வரும் இடங்களில் இருந்தவர்களுக்கு இந்தத் தொற்று அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது:
தொற்று பரவியிருக்கக்கூடிய இடங்கள் மற்றும் நேரங்கள்:
-
விமானப் பயணம் 1: அடிஸ் அபாபாவிலிருந்து ரொறன்ரோ வந்த ET552 விமானம் (Flight ET552 from Addis Ababa to Toronto).
-
விமானப் பயணம் 2: ரொறன்ரோவிலிருந்து மொன்றியலுக்குப் பயணித்த ஏார் கனடா AC410 விமானம் (Air Canada AC410 from Toronto to Montreal).
-
விமான நிலையம்: மிசிசாகாவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் முனையகம் 1 (Terminal 1), ஏார் கனடா செக்-இன் (Check-in) பகுதி.
-
அபாயகரமான நேரம்: ஜூன் 13 அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ள முயன்று வரும் சுகாதாரப் பிரிவு, தங்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்ற அல்லது அந்த நேரத்தில் அங்கு இருந்த அனைவரையும் தங்களது தடுப்பூசி அட்டைகளை (MMR அல்லது MMRV) சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக, 1970 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தட்டம்மைக்கு எதிரான இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். 1970 க்கு முன்னர் பிறந்தவர்கள் இயற்கையாகவே தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறார்கள்.
தட்டம்மையின் அறிகுறிகள்: தட்டம்மை என்பது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இந்த வைரஸ் உடலுக்குள் சென்ற 7 முதல் 21 நாட்களுக்குள் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்:
-
கடுமையான காய்ச்சல், இருமல், மற்றும் தடிமன் (ஒழுகு மூக்கு).
-
கண்கள் சிவந்து நீர் வடிதல் (Conjunctivitis / மெட்ராஸ் ஐ) மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை.
-
முகத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் கீழ்நோக்கிப் பரவக்கூடிய 4 முதல் 7 நாட்கள் நீடிக்கும் சிவப்பு நிறத் தடிப்புகள் (Red Rash).
பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்: தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உள்ளூர் சுகாதாரப் பிரிவையோ அல்லது குடும்ப மருத்துவரையோ தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு நேரடியாகச் செல்வதற்கு முன்னர், தங்களுக்குத் தட்டம்மைத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற விபரத்தை மருத்துவ ஊழியர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பீல் பிராந்தியத்தில் தட்டம்மை பரவும் அபாயம் தற்போது குறைவாக உள்ள போதிலும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பீல் பொது சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.