என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்துக் கூறிய பிள்ளையான், “இது உங்களுக்கு சந்தோஷமான விடயம்தானே” என்றார்.
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற ‘பிள்ளையான்’ மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ஐந்து ஆட்கொலை தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கல்லடியில் உள்ள காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றன.
இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் நடத்தப்பட்டது.
இன்றைய தினம் சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்ந்தது.

அத்துடன் பிள்ளையான் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகளால் பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.