டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு, கனடாவிற்குள் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்த முயன்ற வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் 13 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதித்துள்ளது.
துராந்தே கிங்-மக்லீன் (Durante King-Mclean, 27) என்ற இந்த நபருக்கு, சட்டவிரோதமாக துப்பாக்கி வர்த்தகத்தில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பென்சில்வேனியா (Pennsylvania) நீதிமன்றம் 160 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கிங்-மக்லீன் கனடாவை நோக்கி ஓட்டிச் சென்ற வாடகை வாகனம் ஒன்றை பென்சில்வேனியா மாநிலக் காவல்துறையினர் மறித்துச் சோதனை செய்ய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரைக் கண்டு அவர் தப்பியோட முயன்றதாகவும், பின்னர் அந்த வாகனத்தின் பின்பகுதியில் (Trunk) காலுறைகளுக்குள் (Socks) தனித்தனியாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 கைத்துப்பாக்கிகளை (Handguns) அதிகாரிகள் மீட்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் இரண்டு முழுமையான தானியங்கி (Fully automatic) ரகத்தைச் சேர்ந்தவை என்றும், 11 துப்பாக்கிகள் ஏற்கனவே திருடப்பட்டதாகப் பதிவானவை என்றும், ஒன்றின் வரிசை எண் (Serial number) முற்றாக அழிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட விநியோக லாரியை (Delivery truck) ஓட்டிய ஓட்டுநரும் இந்த கிங்-மக்லீன் தான் என கனடாவில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.