சென்னை:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் தேன் கலந்த விஷ உருண்டையை நம்பி திமுக ஏமாறக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த கால நிலைப்பாட்டில் மாற்றம் வேண்டாம்:
இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டே கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்த பெருமை திமுகவுக்குச் சேரும். இது இந்தியா முழுவதும் பரவி வரலாறு படைத்தது. தற்போது திமுக அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, சதவிகிதக் கணக்குக் காட்டி வஞ்சிக்கும் தேன் கலந்த விஷ உருண்டையை ஏற்று சமரசம் செய்துகொண்டது என்ற பிரச்சாரம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது திமுகவை அழிக்க விரும்பும் அரசியல் கட்சிகளிடையே வேகமாகப் பரவுவது குறித்து திராவிடர் கழகம் பெரிதும் கவலை கொள்கிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்பதை உரிமையுடன் நம்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளை நம்பி ஏமாறக் கூடாது:
தொடர்ந்து அந்த அறிக்கையில் அவர், “திமுக தலைமைக்கு அதன் காவல் அரணான திராவிடர் கழகம் விடுக்கும் உரிமை வேண்டுகோள் என்னவென்றால், கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து மாறக் கூடாது. பாஜக மற்றும் அமித்ஷாக்கள் எவ்வளவு வாக்குறுதிகளைத் தந்தாலும் சதவிகிதக் கணக்குத் தேனை உண்மையென நம்பிவிடக் கூடாது. வாக்காளர்களுக்கு இந்தக் கட்டத்தில் என்ன விளக்கம் சொன்னாலும், மக்கள் மன்றத்தில் திமுகவுக்குக் கெட்ட பெயரும் தீராப் பழியும்தான் ஏற்படும். இது திராவிடர் கழகத்தின் கருத்து மட்டுமல்ல; அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பல பெருமக்கள் மற்றும் அறிவுசார் பிரமுகர்களின் கருத்தும் கூட,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாநிலங்களின் குரல் நசுக்கப்படக் கூடாது:
மேலும் அந்த அறிக்கையில், “கர்நாடகா, ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களின் நிலைப்பாடு என்னவோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். தென் மாநிலங்களைப் பாதிக்கும் வகையில் எந்த முயற்சிக்கும் இடம் தரக் கூடாது; இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது. அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜக பொறியில் சிக்கிவிட்டால், அது திமுகவை வீழ்த்திடத் துடிக்கும் இன, அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாகிவிடும். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தது போல் ஆகிவிடும் என்ற பெருங்கவலையால் இதனை அவசர வேண்டுகோளாக விடுக்கிறோம். உறவோடும் உரிமையோடும் இதனைச் சுட்டுவது நமது கசப்பான கடமையாகும்; சறுக்கல் பெரிய விபத்தாகிவிடக் கூடும் என்பதே நமது கவலை,” என்று கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
#KVeeramani #DravidarKazhagam #DMK #BJP #Delimitation #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive