நிலவைச் சுற்றி 6,800 மைல் (சுமார் 11,000 கிலோமீற்றர்) நீளத்திற்கு அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளின் வளையத்தின் ஊடாக, பூமி முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்தை விட 600 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லூனா ரிங்’ (Luna Ring) என அழைக்கப்படும் இந்தப் பிரம்மாண்டத் திட்டத்தை ஜப்பானின் முன்னணிப் பொறியியல் நிறுவனமான ஷிமிசு கார்ப்பரேஷன் (Shimizu Corporation) முன்மொழிந்துள்ளது.
இத்திட்டத்திற்கு அமைவாக, நிலவின் மத்திய கோட்டைச் சுற்றி சுமார் 11,000 கிலோமீற்றர் நீளத்திலும், 250 மைல் அகலம் வரையிலும் தொடர்ச்சியான சூரிய மின்தகடுகள் நிறுவப்படவுள்ளன.
இது அமெரிக்காவின் அகலத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான நீளத்தைக் கொண்டதாக அமையும். நிலவில் மேகங்கள் மற்றும் புயல்கள் போன்ற காலநிலைத் தடைகள் இல்லாததால், சூரிய ஒளியைத் தடையின்றித் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
நிலவின் ஒரு பகுதி எப்போதும் சூரியனை நோக்கியவாறு இருப்பதால், இந்த வளையத்தின் மூலம் இடைவிடாமல் சுமார் 13,000 டெராவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நுண்ணலை (Microwave) மற்றும் லேசர் தொழில்நுட்பங்கள் ஊடாகப் பூமிக்கு அனுப்ப முடியும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவையே ஒரு மாபெரும் மின்சார உற்பத்தி நிலையமாக மாற்ற முடிந்தால், எதிர்காலத்தில் உலகளாவிய மின்சாரப் பற்றாக்குறை என்பது முழுமையாக நீங்கிவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.