ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர மத்தியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (24) நள்ளிரவு 1.00 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணப் பெட்டியையும் உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். திருடர்கள் உள்ளே நுழைவது முதல் பணத்தை எடுத்துச் செல்வது வரையிலான காட்சிகள் அங்கிருந்த சி.சி.ரி.வி. (CCTV) பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளன.
இன்று (25) காலை விற்பனை நிலையத்திற்கு வந்த உரிமையாளர், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சோதனையிட்ட போதே திருட்டு இடம்பெற்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, உரிமையாளரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் நகரில் வர்த்தக நிலையங்களை உடைத்துத் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், தமது சொத்துக்களின் பாதுகாப்புக் குறித்து வர்த்தகர்கள் மத்தியில் மீண்டும் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.