பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இலங்கைப் பாராளுமன்றம் புதன்கிழமை (25) செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆதரவுடன் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆண், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்துகொண்டனர்.
இதன்போது, சபாநாயகர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து, நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை முன்னெடுக்கப்படும் இவ்வியக்கத்திற்கு பாராளுமன்றத்தின் ஆதரவைத் தெரிவித்தார். அத்துடன், பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் கூட்டுப் பொறுப்பும் பங்களிப்பும் அவசியம் என வலியுறுத்தினர்.
இவ்வாண்டுக்கான உலகளாவிய தொனிப்பொருள், “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைவோம்: நீதியை நிலைநாட்டுவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்பதாகும். இலங்கையில் இவ்வியக்கம் “இது எனது உரிமை” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தில் ஆரம்பமாகும் இவ்வியக்கம், டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று நிறைவடைகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் வன்முறைகளற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியன இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.