ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் வரும் புதன்கிழமை மாலை (வாஷிங்டன் நேரப்படி) முடிவுக்கு வருவதாகவும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அதனை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 7ஆம் திகதி இரவு ஆரம்பமான இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம், வரும் புதன்கிழமை மாலையுடன் முடிவடைகிறது.
“போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு மிகக் குறைவு” (Highly unlikely) என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“தவறான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நான் அவசரப்பட மாட்டேன். எங்களிடம் போதுமான அளவு கால அவகாசம் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
மீண்டும் போர்? ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்கள் உடனடியாகத் தொடங்குமா என்ற கேள்விக்கு, “ஒப்பந்தம் இல்லையெனில், நிச்சயம் போர் தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.
கடந்த வார செய்தியாளர் சந்திப்புகளில் போர்நிறுத்த நீட்டிப்பு குறித்து முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்து வந்த டிரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.