முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூரும் வகையில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கும் வீதியால் சென்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, ஈழத்தமிழர்களால் வருடாந்தம் மே மாதம் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.