எதிர்வரும் டிசம்பர் மாதம் தாயகம் திரும்புவதற்குத் திட்டமிட்டுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்குள் நுழைய முயற்சித்தவுடன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஷாமா ஒபயேத் இஸ்லாம் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது ‘அவாமி லீக்’ கட்சியும் தடைசெய்யப்பட்டுள்ளது.
டிசம்பரில் நாடு திரும்புவதற்காகப் புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை கோரி அவர் விடுத்த விண்ணப்பங்களை பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தற்போதிருக்கும் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை மதித்து, ஒரு குற்றவாளியாக ஹசீனாவை இந்தியா பங்களாதேஷிடம் ஒப்படைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஹசீனாவின் வருகைக்கு ஆதரவாக அவாமி லீக் ஆதரவாளர்கள் போராட்டங்களையும், கடந்த 19 ஆம் திகதி நாடளாவிய கடையடைப்பையும் முன்னெடுத்த நிலையில், கடந்த 10 நாட்களில் குறைந்தது 28 மாவட்டங்களில் டசின் கணக்கான நாட்டு வெடிகுண்டுத் தாக்குதல்களும் வாகனங்களுக்குத் தீ வைப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இதனை “அரசியல் ரீதியாக திவாலான கட்சியின் உயிர்வாழும் தந்திரம்” என அமைச்சர் சாடியுள்ள போதிலும், வன்முறைக்கு தற்போதைய ஆட்சியாளர்களே காரணம் என அவாமி லீக் குற்றம் சாட்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் அரச ஆதரவுடனான இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பங்களாதேஷில் உள்ள சுமார் 1.2 மில்லியன் ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் திருப்பி அனுப்ப மியன்மார் மற்றும் ‘அரக்கான் இராணுவம்’ மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கோரியுள்ளார்.