சென்னை:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடத் தவறியதுடன், 2 நாட்களாகியும் முதலமைச்சர் விஜய் பதில் சொல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
குடி அரசு நூல் வெளியீட்டு விழா:
சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள ‘குடி அரசு’ இதழின் முழுத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நவம்பர் 22 அன்று நடைபெற்றது. இராமகிருட்டிணன் தலைமையில் நடந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டார். இதில் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, சேகர்பாபு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 3 ஆண்டுகளாக திராவிட இயக்க நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. திராவிட இயக்க இதழ்களுக்குத் தாயாக விளங்கும் ‘குடி அரசு’ இதழுக்காக அண்ணாவும் கருணாநிதியும் ஈரோட்டில் தங்கி எழுதியுள்ளனர்,” என்றார்.
ஜோசியம், ஜாதகம், யாகம் என ஆட்சி:
தொடர்ந்து தவெக ஆட்சியை விமர்சித்த அவர், “பெரியார் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளும் போலிப் பெரியாரிஸ்ட்டுகள் இருக்கின்றனர். செஞ்சியில் 40 நாட்களாகக் காணாமல் போன சிறுமியைத் தேடுவதற்குப் பதிலாகக் காவல் நிலையத்தில் யாகம் நடத்தப்படுகிறது. ஜோசியம், ஜாதகம், யாகம் என ஆட்சி நடக்கின்றது. முதலமைச்சர் செல்லும் இடங்களில் முதலில் கோவில்களுக்குச் செல்கிறார். தமிழ்நாட்டை 100 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் செல்லும் வேலை நடக்கிறது. சிறிய விமர்சனம் செய்தால் கூட Gen-Z இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். டெல்லி அழுத்தம் காரணமாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினரின் விமர்சனங்களுக்குக்கூட ஆளுங்கட்சியினர் வாய் திறப்பதில்லை,” என்று குற்றம் சாட்டினார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் திருப்பரங்குன்றம் விவகாரம்:
மேலும் பேசிய அவர், “சுயமரியாதைத் திருமணச் சட்டம், சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை, சுமார் 1.5 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை திமுக நடைமுறைப்படுத்தியது. ஆனால், இன்று தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இரவில் பெண் அரசு அதிகாரிக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். முந்தைய ஆட்சித் திட்டங்களைத் திறந்து வைப்பதிலும், ரீல்ஸ் எடுப்பதிலுமே கவனம் செலுத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியாகி 2 நாட்களாகியும் முதலமைச்சர் விஜய் பதில் சொல்லவில்லை. ‘குடி அரசு’ நூல் தொகுப்பைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
#UdhayanidhiStalin #DMK #TVKGovernment #CMVijay #Thiruparankundram #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive