சென்னை:
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது திருப்பரங்குன்றம் தீர்ப்பை விடப் பேரதிர்ச்சி தருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விளக்கம்:
முன்னதாக, திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள்தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு நமக்கான சதவீதத்தைக் குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த 2 முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளன. இது நம்முடைய 3 ஆண்டு காலத் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி,” என்று கூறினார்.
தமிழ்நாட்டிற்கான பேராபத்தைத் தடுத்துவிட்டோம்:
தொடர்ந்து அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “தற்போது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்குப் பதிலாக, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்திருப்பார்கள். அது தமிழ்நாட்டிற்குப் பேராபத்தாக அமைந்திருக்கும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது,” என்று தெரிவித்து, மசோதாவிற்கான திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
திருமாவளவன் எம்.பி. கடும் அதிர்ச்சி:
திமுகவின் இந்த நிலைப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., “தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது திருப்பரங்குன்றம் தீர்ப்பை விடப் பேரதிர்ச்சி தருகிறது. திமுக வரலாற்றுப் பிழை செய்துள்ளது. பாஜகவின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே திமுக வழிவகுக்கிறது. பாஜகவின் சதித் திட்டத்திற்கு திமுக துணை போவது போல் உள்ளது,” எனக் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள நிலைப்பாடும், அதற்குக் கூட்டணிக் கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கடுமையான எதிர்வினையும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
#Thirumavalavan #VCK #DMK #MKStalin #DelimitationBill #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive