பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 302 கிலோகிராம் போதைப்பொருட்கள் இன்று திங்கட்கிழமை (27) அழித்தொழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பலப்பிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த இந்தப் போதைப்பொருட்களை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட 22 கிலோ 888 கிராம் ஹெரோயின் , 33 கிலோ 172 கிராம் கேரள கஞ்சா மற்றும் 247 கிலோ 940 கிராம் உள்ளூர் கஞ்சா போன்ற மொத்த போதைப்பொருட்களும் இன்று அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தப் போதைப்பொருள் பொதிகள், இன்று அதிகாலை பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தளம் – வனாத்தவில்லுவ பகுதியில் அமைந்துள்ள ‘லெக்டோவத்தை’ தகன உலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு விசேட இயந்திரங்கள் மற்றும் தகன உலைகள் மூலம், சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் போதைப்பொருட்கள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.