யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாக உரிமை யாழ்ப்பாண மாநகரசபைக்கே உரியது என்றும், அதன் ஆளுகையில் வெளிப்புற தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தி யாழ்ப்பாண மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று மாநகர முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்” தொடர்பில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (Trust Fund) குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கலாசார நிலையத்தின் முழுமையான நிர்வாக உரிமை மாநகரசபையிடமே இருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் கலாசார அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு அதன் நிர்வாகத்தில் மேலாதிக்கம் செலுத்த முயற்சிப்பது உள்ளூராட்சி தன்னாட்சிக்கும் அதிகாரப் பரவலாக்கக் கொள்கைக்கும் முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “கூட்டு நிர்வாகம்” என்ற பெயரில் மத்திய அரசு இந்நிலையத்தின் நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும், நிர்வாகக் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் அதிகளவில் உள்ளதால் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாநகரசபையிடம் இருக்காது என்ற அச்சம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்நிலையம் எதிர்காலத்தில் சுயநிறைவு பெற்று வருமானம் ஈட்டும் நிலையை அடைந்ததும் அதன் முழுமையான நிர்வாகம் மாநகரசபைக்கு ஒப்படைக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் பெறப்படும் வருமானம் உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சொத்து எமது மாநகரத்தினுடையது; அதிகாரமும் எம்மிடமே இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இப்பிரேரணைக்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வெளியிட்டதுடன், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநகரசபையின் உரிமைகளை பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்