ஒண்டாரியோவின் பாரி நகரில் உள்ள ஜோர்ஜியன் மாலில் கடந்த மாதம் இடம்பெற்ற மோதலின் போது, கத்தியுடன் (Machete) சிலரைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி மாலை 6:40 மணியளவில் பேஃபீல்ட் வீதியில் (Bayfield Street) உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, குறித்த சிறுவன் கையில் பெரிய கத்தியுடன் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனைக் கண்டுபிடித்த பொலிஸார், அவனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தனர். இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ் அச்சிறுவனின் விபரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை அன்று குறித்த சிறுவன் பொலிஸ் தலைமையகத்தில் சரணடைந்ததையடுத்து, அவன் காவலில் எடுக்கப்பட்டான். அச்சிறுவன் மீது ஆபத்தான நோக்கத்தில் ஆயுதத்தை வைத்திருத்தல், முகத்தை மறைத்து குற்றச் செயலில் ஈடுபடுதல் (Disguise with intent) மற்றும் பிணை நிபந்தனைகளை மீறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த மோதலில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்களைச் சேகரித்து வரும் பொலிஸார், பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.