கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்டர்- 18 ‘என பெயரிடப்பட்டு, அதற்கான தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் ‘அன்டர்- 18’ திரைப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை எஸ் ஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாக்கலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், சரத் குமார், நட்டி நட்ராஜ் , பிரசாந்த், தியாகராஜன், இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், ஆர் .கே. சுரேஷ், நடிகை ஸ்ரீ பிரியா உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” வைத்தியராகி விட வேண்டும் என்ற கனவுடன் வாழும் இளைஞன் .. எதிர்பாராத வகையில் நன்கு திட்டமிடப்பட்ட குற்றவியல் வலைத்தொடர்பில் சிக்கிக் கொள்கிறார். அவனை மீட்க அவருடைய தாயும்.. தந்தையும்.. முன்னெடுக்கும் போராட்டம் தான் ‘அன்டர் -18 ‘படத்தின் கதைக்களம். இதில் ரசிகர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் குற்றவியல் உலகத்தின் கொடூர முகத்தையும்… அதனால் பாதிப்பை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும்… விவரிக்கும் படமாக தயாராகிறது” என்றார்.