உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தகவல்களை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(20.05.2026) தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக இதன்போது மகிந்த, பசில் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பிள்ளையானிடம் உறுதியளித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் முன்னாள் பிரத்தியேகச் செயலாளர் அசாத் மௌலானாவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவிடம் இருந்து பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் வைத்து இந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.