கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் திட்டமிட்டிருந்ததாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இணையதளங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
இந்தச் செய்திகள் “முற்றிலும் பொய்யானவை” என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எஃப்.யு. வூட்லர், அத்தகைய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கஞ்சிப்பாணி இம்ரானின்’ சகா ஒருவர் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்தே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
நேற்று ஜா-எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அத்தகைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்ட ஏ.எஸ்.பி வூட்லர், எனினும் அவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் செய்திகளை நிராகரித்தார்.
குறித்த சந்தேக நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.