உயிர்த்த ஞாயிறுஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த விசாரணைகள் தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) இந்த விசாரணைகளை மிகவும் வினைத்திறனுடன் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் விஜேபால, மிக விரைவில் இந்த விசாரணைகள் முழுமையாக நிறைவடையும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்மாத்திரமன்றி, நாட்டில் இடம்பெற்ற ஏனைய சட்டவிரோதச் செயல்கள், ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாகவும் மக்கள் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இவ்வருடம் நாடு முழுவதும் நடைபெறவுள்ள மே தின ஊர்வலங்களுக்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.