இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சிக்கலான குற்றச் செயல்கள் மற்றும் உருவாகிவரும் புதிய குற்ற முறைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகச் சட்டத்தைத் திறம்பட அமுல்படுத்தும் வகையில் இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் ஆற்றலை மேம்படுத்துவதே இந்த உதவியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகளும் சீனத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.