இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் வகையில், 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா (Free Tourist Visa) வழங்க இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ. சமிந்த பத்திராஜ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2026 மார்ச் 30 அன்று அமைச்சரவை வழங்கிய ஒப்புதல் மற்றும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிவரவு விதிமுறைத் திருத்தங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 30 நாட்கள் வரை இலங்கையில் தங்குவதற்கான இலவச மின்னணு பயண அனுமதியை (ETA) பெறலாம்.
இந்த 30 நாட்களுக்குள் இரண்டு முறை இலங்கைக்குள் வந்து செல்ல (Double-entry) அனுமதி வழங்கப்படும். 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கி இருக்க விரும்பும் பயணிகள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தி விசாவை நீட்டித்துக் கொள்ளலாம்.
இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களைத் தவிர, ஏனைய அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் இலங்கை வருவதற்கு முன்பாகவே மின்னணு பயண அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஓமன், பாகிஸ்தான், போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாற்பது நாடுகளின் பிரஜைகள் இந்த இலவச வீசா திட்டத்தில் நன்மை அடையவுள்ளனர்.
மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு வழக்கம்போல எவ்விதக் கட்டணமும் இன்றி ETA அனுமதி தொடர்ந்து வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அனைத்தும் இன்று அரசாங்க வர்த்தமானியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.