இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (21) வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 2,330 பாரிய வீதி விபத்துகளில், 2,463 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், இதே காலப்பகுதியில் 5,868 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் காயமடைந்தவர்களில் சுமார் 50 சதவீதமானோரின் உயிர் பிழைக்கும் வாய்ப்பு நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், 9,870 சிறு விபத்துகளும், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த 4,488 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துகளில் பாதசாரிகளே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி 813 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், பாதசாரிகளின் கவனயீனமே இதற்குப் பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 876 மோட்டார் சைக்கிள் விபத்துகளில் சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 168 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் ஆவர்.
மேலும், சைக்கிள் ஓட்டுநர்கள் 165 பேரும், சாரதிகள் 190 பேரும், பயணிகள் 240 பேரும் இந்தக் காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கை 11 ஆல் அதிகரித்துள்ள போதிலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 ஆல் குறைவடைந்துள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் கவனயீனமாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான விசேட பொலிஸ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.