அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தக்கூடிய எதிர்ப்புகளை அடக்க கூடிய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்பபடுத்துவதற்கு அரசாங்கம் முயல்வதாக முன்னிலை சோசலிஸ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த கட்சியின் செயலாளரும் மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுகுழு உறுப்பினருமான துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்துள்ளதாவது.
தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்த போதிலும் அதனை மீறி அரசாங்கம் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
வர்த்தமானியில் வெளியாகியுள்ள புதிய சட்டமூலத்தில் காணப்படும் பல விதிகள் நடைமுறையில் உள்ள சட்டத்தினை விட ஆபத்தானவை அடக்குமுறை தன்மை கொண்டவை.
வரிகளை குறைக்குமாறு அரசாங்கத்தினை கோரினால் அதுவும் பயங்கரவாதமாகும்.சர்வதேச நாணயநிதியத்திற்கு எதிராக நாங்கள் ஏதாவது கருத்து சொன்னால் புதிய சட்ட மூலத்தின் படி அதுவும் பயங்கரவாதமாக கருதப்படும்.
பொதுச்சொத்து மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான சட்டங்களும் பயங்கரவாதமாக கருதப்படலாம்,தடுப்பு உத்தரவில் கையெழுத்திடும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது முன்னர் அது ஜனாதிபதியிடம் காணப்பட்டது.
தடை செய்யப்பட்டதாக அமைப்பொன்றை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது இது கவலையளிக்கும் மற்றுமொரு விடயம், என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.