கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“பொறியாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை இரத்துச் செய்வதற்காக உழைத்த அனைவருக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதிசெய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைஸர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட அனைத்துச் சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விவகாரத்தில் நானும் எனது குழுவினரும் எம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தோம். இறுதியில் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தமையையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகிறேன். அத்துடன், இந்த நற்செய்திக்கு வழிவகுத்த சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்திற்கும், அம்மாநில மன்னருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.