அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சமற்றதும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை கிரிக்கெட் இடைக்காலக் குழுவின் தலைவர் எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வரைஞர் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:
“முக்கிய ஆடவர் கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படவில்லை என அண்மையில் சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. உருவாக்கப்பட்டு வரும் இச்சட்டமூலத்திற்குள் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் இவ்வாறான தகவல்கள் தொடர்பில் உரிய தெளிவுபடுத்தல்களை முன்வைக்குமாறு ஆலோசனை வழங்குகிறேன்.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டிற்குப் பங்களிப்புச் செய்த திறமையான முன்னாள் வீரர்கள் பலர் உள்ளனர். வீரர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பங்களில் முன்னாள் வீரர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளத் திறந்த களமொன்றை உருவாக்க வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
1970 மற்றும் 80ஆம் தசாப்தங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி திறமைக்கு முதலிடம் கொடுத்துச் சாதனைகளைப் படைத்தது. ஆனால் இங்கு திறமையான வீரர்கள் இருந்தபோதிலும், ‘அணி மனப்பான்மை இல்லை’ எனக் கூறி வாய்ப்பளிக்காத நிலை காணப்படுகிறது. பல வருடங்களாக ஒருசில குடும்பங்களும் குழுக்களும் அதிகாரத்தைச் செலுத்தி கிரிக்கெட் விளையாட்டில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த அரசியல்மயமாக்கலை இல்லாதொழிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரர்களைத் தெரிவு செய்யும்போது கிராமப்புற வீரர்களுக்கான பாரபட்சத்தையும், குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்கும் போக்கையும் தவிர்க்க வேண்டும். இன, மத பேதங்களுக்கு அப்பால் திறமை, ஆற்றல் மற்றும் ஓட்டங்களைக் குவிக்கும் வல்லமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் பொதுவான வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
இலங்கை கிரிக்கெட்டிலுள்ள சீர்கேடுகள் களையப்பட வேண்டும். சட்டம் திருத்தப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அதற்கு இணங்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் முன்கூட்டியே ஆராய்ந்து, அவ்வாறானதொரு நெருக்கடி ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்.”