புதன்கிழமை இரவு ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட பாதசாரி (Pedestrian) ஒருவர், கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எக்லிண்டன் அவென்யூவிற்குத் (Eglinton Avenue) தெற்கே உள்ள பேர்ச்மவுண்ட் (Birchmount) மற்றும் கொம்ஸ்டொக் (Comstock) வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், நேற்றிரவு 11 மணிக்குப் பின்னர் அவசர உதவிக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
31 வயதுடைய ஓட்டுநர் ஒருவரின் வாகனம், 63 வயதுடைய பெண் பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் சிபி24 (CP24) செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தற்ற, ஆனால் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.