வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம்(3.3.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டு உள்ள வெளிநாட்டுச் நாணயமாற்றுச் சட்டத்தின் கீழான கட்டளை ஆனது நாடு பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய மீட்சி, அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் ஆகிய வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் ஒரு முதன்மையான விடயமாக காணப்படுகின்றது.
2026, பெப்ரவரி 17 ஆம் நாள் அன்று, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டுச் நாணயமாற்றுச் சட்டத்தின் கீழான கட்டளையானது2017 ஆம் ஆண்டின் 12 ஆம் எண் கொண்ட வெளிநாட்டு நாணயமாற்றுச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
இது இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டின் நிதி அமைப்பின் உறுதித்தன்மையைப் பேணும் பொருட்டாக முன்வைக்கப் பட்டுள்ளது.
இந்தப்பிரிவு, ஓர் ஒழுங்குமுறை பாதுகாப்புக் கருவியாகச் செயற்படுகிறது. இது நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு நிலையைப் பாதுகாப்பதற்கும், நிதி உறுதித் தன்மையை பேணுவதற்கும், வெளிநோக்கிய சில பணப் பரிமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்த அல்லது மட்டுப்படுத்த நிதி அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த மாற்றமானது இலங்கை நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ள அரச மொத்தக் கையிருப்பு (GOR) பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றது.
வெளிநாட்டு நாணயமாற்று இருப்பைப் பாதுகாக்கும் அதேவேளையில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான வரம்புகள் கணிசமாகத் தளர்த்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.