தமிழ் சினிமாவில் நட்சத்திரமாக விளங்கும் ஜோசப் விஜய் சந்திரசேகர் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய ‘தமிழக வெற்றி கழக’ நிர்வாகம், தற்போது இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவை உரிமை கோர வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முயற்சியால் இலங்கைக்கு கச்சத்தீவு கிடைத்தது. இருப்பினும், தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகம் அதனைத் திரும்பக் கோரக்கூடும் என்பதால் இலங்கை அதனை இழக்க நேரிடும். மேலும், இலங்கை அரசாங்கம் அதனை விட்டுக்கொடுக்கவும் வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.
“டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ‘மெட்ராஸ் செக்யூரிட்டீஸ்’ (Madras Securities) என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்து இலங்கையர்களின் உயிரியளவுகள் (Biometrics) அந்த நிறுவனத்திற்குச் செல்லும். தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே இதற்கான டெண்டரை முடித்துவிட்டது. முந்தைய அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியபோது இதே அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதனை எதிர்த்தனர். அதுமட்டுமின்றி, இதே அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் 1970-களில் இந்திய விவாக்கக் கொள்கை (Indian expansionism) குறித்து விரிவுரைகளை நடத்தினார்கள்,” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் விஜய் சந்திரசேகரின் தேர்தல் வெற்றியைப் பாராட்டியதுடன் அவருக்குத் தங்களது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் தென்னிந்தியத் திரை நட்சத்திரத்திற்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.