சென்னை:
மே 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தைச் சுரண்டிய திமுக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எத்தகைய தில்லுமுல்லுகளையும் அரங்கேற்ற வாய்ப்புள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் செயற்கையாகச் சித்திரிக்கப்பட்ட திமுகவின் சித்து விளையாட்டுகள் என்று விமர்சித்துள்ள அவர், அவற்றை நம்பித் தொண்டர்கள் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணிக்கே மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், 17-சி படிவத்தில் உள்ள வாக்குகளும் எந்திரத்தில் உள்ள வாக்குகளும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகே எண்ணிக்கையைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அஞ்சல் வாக்குகளை முன்னதாகவே எண்ணி முடிக்கச் செய்வதோடு, ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டும் என முகவர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை அன்புமணி ராமதாஸ் வழங்கியுள்ளார்.
#AnbumaniRamadoss #PMK #ADMKAlliance #TNElection2026 #ElectionResults #May4 #CountingDay #Vigilance #TamilNaduPolitics #BreakingNews #DMKWatch #VoterVerdict #PoliticalUpdate #Success2026 #May1 #ElectionCommission #PostPollSurvey #TamilNaduPolls